அரியலூர்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
|ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான முதியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிறுமி பலாத்காரம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள பெரியகிருஷ்ணாபுரம் மேல தெருவை சேர்ந்த சக்கராயுதம் மகன் சசிகுமார்(வயது 20). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் 12 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த அன்புரோஸ்(70) என்பவரும் அந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமி சோர்வாக காணப்பட்டதுடன், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல்போனது. இதனால் அவரது தாய் சிறுமியை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து கடைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
வாலிபர் கைது
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய், இதுகுறித்து அவரிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தை அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்தார். மேலும் தலைமறைவான அன்புரோசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.