சென்னை
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் 18 பவுன் நகை - ரூ.5 லட்சம் மோசடி - வாலிபர் கைது
|சென்னை புளியந்தோப்பில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் 18 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு ராமசாமி தெருவை சேர்ந்த 31 வயதுடைய இளம்பெண் புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசனை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் நான் எனது தந்தையுடன் வசித்து வருகிறேன். மறுமணத்திற்காக இணையதளம் மூலம் விளம்பரம் செய்திருந்ததை கண்டு ராணிப்பேட்டை, காந்தி நகரை சேர்ந்த முகமது உபைஷ் (வயது 37) என்பவர் என்னை தொடர்பு கொண்டு தான் சிங்கப்பூரில் வேலை செய்வதாக கூறி அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி சென்னை வந்த அவர் திருமணத்திற்கு தயாராக இருப்பதாக ஆசை வார்த்தை கூறி என்னிடமிருந்த பணம் ரூ.5 லட்சத்தையும், 18 பவுன் நகைகளையும் பெற்று சென்றார்.
பின்னர், தான் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாக கூறி அவர் தொடர்பை துண்டித்து விட்டார். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணிப்பேட்டையில் இருந்த முகமது உபைசை பிடித்து அவரிடமிருந்து 6 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.