சென்னை
ராயபுரத்தில் மாநகர பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
|ராயபுரத்தில் மாநகர பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவொற்றியூர் டாக்டர் கலைஞர் நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 42). மாநகர பஸ் டிரைவர். இவர் நேற்று திருவொற்றியூரில் இருந்து தடம் எண்-1 கொண்ட பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராயபுரம் பகுதி எம்.எஸ். கோவில் அருகே சென்றபோது, கொடுங்கையூர் ஆண்டாள் நகரை சேர்ந்த ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரியும் ஜெகநாதன் (வயது 21) என்ற ஊழியர் மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசியபடி பஸ்சை முந்திச் சென்றுள்ளார். அப்போது பஸ் டிரைவர் நந்தகுமார், ஓரமாக நிறுத்தி செல்போன் பேசக்கூடாதா? என்று கண்டித்துள்ளார். அதற்கு அப்படித்தான் செய்வேன் என்ன செய்வாய்? என்று கேட்டு தகராறு செய்த ஜெகநாதன் தான் வைத்திருந்த ஹெல்மெட்டால் பஸ் டிரைவரை தாக்கியுள்ளார்.
இது குறித்து டிரைவர் நந்தகுமார் ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் ஜெகநாதனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.