செங்கல்பட்டு
பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் பகுதியில் ஊருக்குள் புகுந்த முதலை
|நெடுங்குன்றம் பகுதியில் ஊருக்குள் புகுந்த முதலையால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஊருக்குள் புகுந்த முதலை
சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள நெடுங்குன்றம் ஏரியில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த ஏரியில் உள்ள முதலைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன.
இந்தநிலையில் நேற்று அதிகாலை நெடுங்குன்றம் மேட்டுத்தெருவில் சுமார் 7 அடி நீளம் உள்ள முதலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதை பார்த்த பொதுமக்கள், அலறி அடித்து ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இளைஞர்கள் கயிறு கட்டி பிடித்தனர்
பின்னர் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கயிறு கட்டி முதலையை லாவகமாக பிடித்தனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கிண்டியில் இருந்து வந்த வனத்துறையினர் பிடிபட்ட முதலையை அங்கிருந்து கொண்டு சென்றனர்.
நெடுங்குன்றம் ஏரியில் உள்ள முதலைகளால் இப்பகுதி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை உள்ளதால் ஏரியில் உள்ள முதலை களை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.