அரியலூர்
பயிற்சி பெற்று விமான நிலையத்தில் பணிபுரிய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
|பயிற்சி பெற்று விமான நிலையத்தில் பணிபுரிய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு 18 முதல் 25 வயது நிரம்பிய, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் 3 மாதம் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவு தொகையும் தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இப்பயிற்சி பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். எனவே இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.