மதுரை சிறையில் இருந்து இளம்பெண் தப்பி ஓட்டம்
|இளம்பெண் மீது பணமோசடி உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன.
மதுரை,
மதுரை கருப்பாயூரணி கணேஷ்நகரை சேர்ந்தவர், தனசேகரன். இவருடைய மனைவி பூங்கொடி (வயது 50). சம்பவத்தன்று இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்குள்ள எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை.
அப்போது அவருக்கு பின்னால் நின்ற இளம்பெண் பூங்கொடியின், ஏ.டி.எம். கார்டை வாங்கி பணம் எடுக்க உதவுவதாக கூறினார். ஆனால் பணம் எடுக்க முடியவில்லை என்று கூறி வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை அவரிடம் ஏமாற்றி கொடுத்துவிட்டு அங்கிருந்து அந்த இளம்பெண் சென்றுவிட்டார்.
அதன்பின்னர் பூங்கொடியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.53 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அப்போதுதான், அந்த இளம்பெண், பூங்கொடியி்டம் கொடுத்தது வேறு ஏ.டி.எம். கார்டு என்பதும், அந்த பெண் தனது கார்டை பயன்படுத்தி பணம் எடுத்ததும் தெரியவந்தது. உடனே இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
ஏ.டி.எம். மையத்தில் வயதானவர்களுக்கு உதவுவது போல் நடித்து கைவரிசை காட்டிவந்த தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் மனைவி மணிமேகலைதான் (24), பூங்கொடியிடமும் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே மணிமேகலை மீது ஏ.டி.எம். மைய பணமோசடி தொடர்பாக 17 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
அதை தொடர்ந்து போலீசார் அவரது ஊருக்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் மணிமேகலையை மதுரை மாவட்ட கோர்ட்டில் அண்ணாநகர் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்துவிட்டு நேற்று மாலையில் மதுரை பெண்கள் சிறைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவர் தனது உடையை மாற்றி வருவதாக குளியலறைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. மணிமேகலை சிறையில் இருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. உடனே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும், அனைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் மதுரை பஸ் நிலையம், ரெயில்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் திருமங்கலம் அருகே மணிமேகலையை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மீண்டும் அவரை அழைத்து வந்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய 2 மணி நேரத்தில் மணிமேகலை மீண்டும் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.