சென்னை
அரும்பாக்கம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு
|அரும்பாக்கம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள், நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பூந்தமல்லி கில்மா நகரை சேர்ந்தவர் அஸ்வின் குமார் (வயது 25). இவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அரும்பாக்கம் வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுக் கொண்டு இருந்தார். அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அஸ்வின் குமார் மீது மோதியது.
இதில் அஸ்வின்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவருடைய உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அஸ்வின்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விபத்து நடந்த இடத்தில் திரண்டனர். மேலும் அந்த வழியாக விபத்தை ஏற்படுத்திய பஸ் நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு பஸ் வந்தது. அந்த பஸ்சை அஸ்வின் குமார் உறவினர்கள், நண்பர்கள் சிறை பிடித்தனர்.
மேலும் அந்த பஸ்சின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று நள்ளிரவு அரும்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.