செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி சென்று வாயில் மது ஊற்றி நர்சுக்கு பாலியல் தொல்லை -வாலிபர் கைது
|செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி சென்று வாயில் மது ஊற்றி நர்சுக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது மதிக்கத்தக்க பெண். சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அவருடன் செங்கல்பட்டு அடுத்த ஆத்தூரை சேர்ந்த சரவணன் (வயது 29) நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. சரவணனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான நேர்முக தேர்வில் கலந்துகொள்ள தனது தோழிகளுடன் நள்ளிரவு பஸ்சில் வேலூர் செல்ல திட்டமிட்டிருந்தார். இது குறித்த தகவலை அவர் சரவணனிடம் பகிர்ந்துள்ளார். சரவணன் தானும் உடன் வருவதாக கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்தார். இருப்பினும் சரவணன் தனது நண்பர்கள் இருவருடன் காரில் அந்த பெண் சென்ற பஸ்சை பின்தொடர்ந்து சென்றார். காஞ்சீபுரத்தில் வைத்து வலுக்கட்டயமாக அந்த பெண்ணை காரில் ஏற்றி கடத்தி சென்றார்.
அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றிய சரவணன் பாலியல் தொல்லை கொடுத்து ஆத்தூர் அருகே உள்ள முட்புதரில் தள்ளிவிட்டு சென்றார். போதை தெளிந்து வீட்டுக்கு சென்ற பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சரவணனை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.