< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

தினத்தந்தி
|
2 Aug 2022 9:37 PM IST

ஓட்டப்பிடாரம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்த ஒண்டிவீரன் மகன் கவியரசன். கட்டிட தொழிலாளி. இவருக்கும், ஜெகவீரபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் மகள் மகாலட்சுமி (வயது 22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனாலும், இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.‌

இந்நிலையில் மகாலட்சுமி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதற்கு கவியரசன் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையிலும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கவியரசன் வெளியே சென்று விட்டார். வீட்டில் இருந்த மகாலட்சுமி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மகாலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் மகாலட்சுமி தற்கொலை சம்பவம் குறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்