சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
|எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வடமாநில இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் வடமாநிலங்களுக்கு ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த ரெயில்கள் மூலம் தினமும் வட மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சென்னைக்கு வருவதும் போவதுமாக உள்ளனர். இதனால், ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. இதனால், இந்த ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் சுத்தம் செய்ய வந்த துப்புரவு பணியாளர் ஒருவர் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவர் உடனடியாக ரெயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் . இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே இருப்புபாதை போலீஸார், அமர்ந்த நிலையில் சடலமாக கிடந்த வட மாநில பெண்ணின் உடலை மீட்டு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மெற்கொண்டு வருகிறார்கள்.