வரதட்சனை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை - தலைமறைவாக இருந்த கணவர் கைது...!
|சேலத்தில் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்,
ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி நைனாகாடு பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் அனுஸ்ரீ (வயது 26). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பொன் கவுதம் நந்தா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் அனுஸ்ரீயிடம் வரதட்சனை கேட்டு கணவர் பொன் கவுதம் நந்தா மற்றும் மாமனார் தங்கராஜ், மாமியார் அருள்மணி ஆகியோர் துன்புறுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து அனுஸ்ரீ தீவட்டிப்பட்டி பங்களா தோட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். மேலும் அவர் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 23-ந் தேதி வீட்டின் மேல்மாடியில் உள்ள அறையில் அனுஸ்ரீ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரவி தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, அனுஸ்ரீயின் கணவர் பொன் கவுதம் நந்தா, மாமனார் தங்கராஜ், மாமியார் அருள்மணி ஆகியோர் மீது பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பொன் கவுதம் நந்தாவை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.