< Back
மாநில செய்திகள்
நல்ல வழக்குகளை நடத்தினால் மட்டுமே அடையாளம் காணப்படுவீர்கள்- இளம்வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
மதுரை
மாநில செய்திகள்

நல்ல வழக்குகளை நடத்தினால் மட்டுமே அடையாளம் காணப்படுவீர்கள்- இளம்வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
1 Sept 2023 3:33 AM IST

நல்ல பல வழக்குகளை நடத்துவதன் மூலமாக மட்டுமே அடையாளம் காணப்படுவீர்கள் என்று இளம்வக்கீல்களுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா அறிவுறுத்தினார்.


நல்ல பல வழக்குகளை நடத்துவதன் மூலமாக மட்டுமே அடையாளம் காணப்படுவீர்கள் என்று இளம்வக்கீல்களுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா அறிவுறுத்தினார்.

அடையாளம் காணப்படுவீர்கள்

மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தில் (எம்.எம்.பி.ஏ.) இளம் வக்கீல்கள் பின்பற்ற வேண்டிய தொழில் முறை நெறிகள் என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :-

இளம் வக்கீல்கள் குதிரைகளைப் போல உழைக்க வேண்டும். சாது போல் உணவு அருந்த வேண்டும். ஏழைகளின் கோரிக்கைகளுக்காக நீங்கள் உழைத்தால் அவர்கள் மனதார வாழ்த்தி, உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். சமுதாயத்தில் கோர்ட்டும் வக்கீல்களும் இரு கண்கள். வக்கீல் தொழிலில் உங்கள் நடத்தை மிகவும் முக்கியமானது. நல்ல பல வழக்குகளை நடத்துவதன் மூலமாக மட்டுமே நீங்கள் வக்கீல்களாக அடையாளம் காணப்படுவீர்கள்.

சிறந்த வக்கீல்

நீதிமன்றத்திற்கும், மூத்த வக்கீல்களுக்கும் இளம் வக்கீல்கள் மரியாதை கொடுக்க வேண்டும். எதிர்தரப்பு வக்கீல் உங்கள் வாதத்தில் இருந்து மாறுபட்டாலும், அவருக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். வழக்கை சுருக்கமாக கூறி நீதிபதிகளுக்கு விளங்க வைப்பது தான் வெற்றிக்கு காரணம். இது தான் சிறந்த வக்கீலுக்கான ஹால் மார்க் முத்திரை.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்னிலை வகித்தார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பட்டு தேவானந்த், விக்டோரியா கவுரி, குமரப்பன், வடமலை உள்ளிட்ட நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீரா கதிரவன் பாஸ்கரன் அரசு பிளீடர் திலக்குமார் மற்றும் அரசு வக்கீல்கள், வக்கீல்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக வக்கீல் சங்கத்தலைவர் சீனிவாச ராகவன் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சி முடிவில் சங்கத்தின் செயலாளர் ஆயிரம் செல்வகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்