"நடராஜர் கோவிலுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை" - அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் பரபரப்பு கடிதம்
|சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆய்வுக்கு வருவதை கைவிட வேண்டுமென்று இந்து சமய அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை,
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அறநிலையத்துறையினர் ஆய்வுக்கு வருவதை கைவிட வேண்டுமென்று இந்து சமய அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற 7 மற்றம் 8 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்தப்படும் என்று இந்த சமய அறிநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அறநிலையத்துறைக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பொது தீட்சிதர்கள் சார்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், புகாரின் கீழ் தேவைப்பட்டால் குறிப்பிட்ட கணக்குகள் மட்டுமே கேட்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1976-ம் ஆண்டு முதல் சிதம்பரம் நடராஜர் கோவிலின் சொத்து விவரங்கள் அரசிடம் உள்ளது என்றும் அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் கோவில்களிலேயே பதிவேடுகள் இல்லாத நிலையில் நடராஜர் கோவிலில் பதிவேடுகள் கேட்பது நியாயமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
2006-ம் ஆண்டு கோவிலின் நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் அறநிலையத்துறையால் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் அதன் அறிக்கை தங்களுக்கு சமர்ப்பிக்கப்படாமலேயே மீண்டும் ஆய்வுக்கு வருவதை எப்படி ஏற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து ஆய்வுக்கு வருவதை கைவிடுமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.