திண்டுக்கல்
கள்ளச்சாராயம் குறித்து புகார் அளிக்கலாம்
|கள்ளச்சாராயம் குறித்து செல்போனில் புகார் அளிக்கலாம் என்று மதுவிலக்கு போலீசார் அறிவித்துள்ளனர்.
விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. அதுதவிர 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் ஒருசிலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதைத் தொடர்ந்து விஷச்சாராயத்தை விற்ற சிலரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசாரும், மதுவிலக்கு போலீசார் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை நடத்துகின்றனர். இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளச்சாராய தொழில் நடைபெற்ற 17 கிராமங்களை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம், வெளிமாநில மதுபானம், கஞ்சா ஆகியவை விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள், 85258 52544 எனும் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதேபோல் வாட்ஸ்-அப் மூலமாகவும் புகார் கூறலாம். அவ்வாறு புகார் கொடுப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.