< Back
மாநில செய்திகள்
மாடித்தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மாடித்தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
13 July 2023 12:15 AM IST

மாடித்தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றான மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலை துறைக்கு 450 தொகுப்புகள் வீதம் ரூ.2 லட்சத்து 250 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இம்மாடி தோட்ட தொகுப்பில் செடிவளர்ப்பு பைகள்-6, 2 கிலோ தென்னை நார்கழிவு மற்றும் மக்கிய கரும்பு சக்கை கட்டிகள்-6, 6 வகையான காய்கறி விதைகள் (அதிக மகசூல் தரும் வீரிய ஒட்டு ரகம் மற்றும் பாரம்பரிய வகைகள்), அசோஸ்பைரில்லம்-200 மில்லி, பாஸ்போபாக்டீரியா-200 மில்லி, டிரைகோடெர்மா விரிடி-200 கிராம், வேப்பெண்ணெய் மருந்து-100 மில்லி, மாடி தோட்ட காய்கறி வளர்ப்புக்கான கையேடு-1 ஆகியவை அடங்கிய இடுபொருட்கள் வழங்கப்படும். ஒரு தொகுப்பு மொத்த விலை (போக்குவரத்து செலவு உள்பட) ரூ.900 ஆகும். இதில் தொகுப்பு ஒன்றிற்கு 50 சதவீதம் மானியமாக ரூ.450 வழங்கப்படும். மீதி தொகை ரூ.450 பயனாளிகள் பங்கு தொகையாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு பயனாளியும் அதிக பட்சமாக இரண்டு தொகுப்புகள் பெறலாம். பயனாளிகள் மாடித்தோட்டம் அமைப்பதற்கு https://www.tnhorticulture.tn.gov.in/kit-new/என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் இத்திட்ட இனத்தில் 450 தொகுப்புகளில் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின விவசாயிகளுக்கு உதவும் வகையில் 300 தொகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயனடைய விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்