அரியலூர்
ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
|ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 27 ஆண்கள் மற்றும் 1 பெண் என மொத்தம் 28 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படும். மேலும் இதற்கான தேர்வு அடுத்த மாதம் 6 மற்றும் 7-ந்தேதிகளில் நடைபெறும். ஊர்க்காவல் படையில் சேருவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாட்களில் 20 வயது முதல் 45 வயதுக்குள்ளும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும். தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 எடுத்து வர வேண்டும். இந்திய குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சி தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் உடல் தகுதிகள் காவல்துறையை போன்றது. இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரிய படித்தொகை மட்டுமே பெற்றுத்தரப்படும். பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஊர்க்காவல் படைக்கு 3 ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து வருகை தர வேண்டும். 45 நாட்கள் கவாத்து பயிற்சி நடைபெறும். அரசு பணியில் உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.