< Back
மாநில செய்திகள்
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர ஆன்லைனில் 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்- முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தகவல்
மதுரை
மாநில செய்திகள்

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர ஆன்லைனில் 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்- முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தகவல்

தினத்தந்தி
|
25 April 2023 3:04 AM IST

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் வருகிற 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.


இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் வருகிற 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்பில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான இலவச மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. அடிப்படை கல்வியை கட்டாயம் பெற வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி இந்த சேர்க்கை ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, மொத்த அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கையில் 25 சதவீதம் இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்த சட்டத்தின் படி, 2023-24 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் வருகிற 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர் சேர்க்கைக்கு தகுதியான குழந்தைகளின் விவரங்கள் ஆன்லைனிலும், அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையிலும் வருகிற 21-ந் தேதி வெளியிடப்படும்.

குலுக்கல் முறையில்

சேர்க்கை நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் எந்த காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியிடப்படும். கட்டாய கல்விச்சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020-க்குள் பிறந்திருக்க வேண்டும். 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 1.8.2017 முதல் 31.7.2018-க்கு முன் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, பிறப்பு சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் எனில் சாதிச்சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் எனில் உரிய சான்றிதழ், நலிவடைந்த பிரிவினர் எனில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் உள்ள வருமான சான்றிதழ், இருப்பிட சான்று ஆகியவற்றை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம், கல்வி மாவட்ட அலுவலகம், வட்டாரக்கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலகம் ஆகியவற்றில் இலவசமாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வருகிற 23-ந் தேதி குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

29-ந் தேதிக்குள்

குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் வருகிற 24-ந் தேதி ஆன்லைனிலும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை அடுத்த மாதம் 29-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும்.

இது குறித்து பெற்றோர்களுக்கு மேலும் தகவல்கள் தேவைப்படின், முதன்மைக்கல்வி அலுவலகம், கல்வி மாவட்ட அலுவலகம் (தனியார் பள்ளிகள்) ஆகியவற்றுக்கு நேரில் சென்று அறியலாம் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்