அரசு கலை கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
|தமிழ்நாட்டில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்புகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு இந்த விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நிறைவு பெற்று, மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கல்லூரிகளில் உள்ள இடங்களை விட மாணவ-மாணவிகள் அதிக அளவில் விண்ணப்பித்து இருந்ததால் கூடுதலாக இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்த இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இந்த நிலையில் அரசு கலை கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை நேற்று வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்புகளில் காலியாக இருக்கும் 24 ஆயிரத்து 341 இடங்களுக்கு இந்த விண்ணப்ப பதிவு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
விண்ணப்ப பதிவு செய்பவர்களில் தகுதியானவர்களுக்கான தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் மூலம் வருகிற 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான செயல்பாடுகள் வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கும். விண்ணப்ப பதிவு உள்பட மேலும் விவரங்களுக்கு www.tngasapg.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.