< Back
மாநில செய்திகள்
தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
2 July 2022 11:25 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள்

இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியருக்கான கல்வி தகுதித்தேர்வு தாள்-1-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியருக்கான கல்வி தகுதித்தேர்வு தாள்-2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை ஆசிரியர் பதவிக்கு முதுகலை ஆசிரியருக்கான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தமிழக அரசின் திருத்திய வழிகாட்டு முறைகளின்படி பள்ளி அமைந்துள்ள ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள் அவ்வாறு இல்லையெனில் பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை எழுத்துப் பூர்வமாக நேரடியாகவோ மின்னஞ்சல் வாயிலாகவோ மாவட்ட கல்வி அலுவலரிடம் உரிய கல்வி தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது முன்னுரிமை அடிப்படை இடைநிலை, பட்டதாரி ஆசிரியருக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அவ்வாறு இல்லை எனில் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மின்னஞ்சல்

நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரம் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

விண்ணப்பங்ளை திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலருக்கு deovnbi2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

இவற்றை மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலரிடம் நாளை (திங்கட்கிழமை) முதல் 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்.

முற்றிலும் தற்காலிகம்

இந்த நியமனமானது முற்றிலும் தற்காலிகம் எனவும், மாறுதல் மற்றும் முறையான நியமனங்கள் மூலம் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும். பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லை எனில் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்