< Back
மாநில செய்திகள்
ஒன்றிய அரசின் தமிழ்வழி எழுத்துத்தேர்வு மூலம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஒன்றிய அரசின் தமிழ்வழி எழுத்துத்தேர்வு மூலம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
9 Feb 2023 12:15 AM IST

10-ம் வகுப்பு படித்தவர்கள் ஒன்றிய அரசின் தமிழ்வழி எழுத்துத்தேர்வு மூலம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஸ்டாப்செலக்ஷன் கமிஷன்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டி தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுநர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் செலக்க்ஷன் கமிஷன் பல்வகை பணியாளர் பணிக்கு ஆபேரட்டர், பியூன், கேட் கீப்பர்கள், காவலாளி, ஜுனியர் ஆபரேட்டர், தோட்டக்காரர், ஹவில்தார் உள்பட 11,409 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு மூலம் விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில்

இத்தேர்வுக்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தெளிவு பெற்று விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1.1.2023-ந் தேதி 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி. அல்லது எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்த காலிப்பணியிடங்களுக்கு ஒரே கணினி வழி எழுத்து தேர்வாக தமிழில் இரண்டு பிரிவுகளில் 1½ மணி நேரம் நடைபெறும். முதல் பிரிவில் 45 நிமிடங்களில் 40 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

மதிப்பெண் கழித்தல்

மேலும் இப்பிரிவில் ஒவ்வொரு சரியான கேள்விக்கும் 3 மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் கழித்தல் கிடையாது. 2-வது பிரிவுகளில் 45 நிமிடங்களில் 50 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இப்பிரிவில் சரியான கேள்விக்கு 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான கேள்விக்கு 1 மதிப்பெண் கழித்தல் செய்யப்படுவதோடு இறுதிப்பட்டியலுக்கும் இப்பிரிவின் 150 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். ஹவில்தார் பணிக்கு கூடுதலாக உடல் தகுதி தேர்வும் நடத்தப்படும்.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் மேற்கண்ட தேர்வுக்கு நேரடியாக தாங்களே இணைய வழியாகவோ அல்லது இவ்வலுவலகத்திற்கு வந்து இணைய வழியாகவோ விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

இலவச பயிற்சி வகுப்பு

மேலும் எண்.18/63, நோபால் தெரு, கள்ளக்குறிச்சி- 606202 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடைபெறவுள்ளது. எனவே இந்த பயிற்சி வகுப்பில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்