ராமநாதபுரம்
பணிச்சுமை, மனசுமையை சரி செய்யும் உன்னத வழி யோகா-மாவட்ட நீதிபதி பேச்சு
|பணிச்சுமை, மனசுமையை சரி செய்யும் உன்னத வழி யோகா என்று மாவட்ட நீதிபதி கூறினார்.
--
பணிச்சுமை, மனசுமையை சரி செய்யும் உன்னத வழி யோகா என்று மாவட்ட நீதிபதி கூறினார்.
சர்வதேச யோகா தினம்
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியும், ஐகோர்ட்டு உத்தரவின்படியும் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா தலைமையில் நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் கோர்ட்டு ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சியாளர் வழிகாட்டுதலின் படி யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.
அப்போது மாவட்ட நீதிபதி விஜயா கூறியதாவது:-
பணிச்சுமை
யோகா பயிற்சியானது மனிதனின் உடல் மற்றும் மனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சமநிலைப்படுத்திட உறுதுணை புரிகிறது. இதன்மூலம் மனிதனுக்கு உண்டாகும் எண்ணற்ற பல நோய்கள் நீங்கி உடலுக்கு புத்துணர்வும் ஆரோக்கியமும் கிடைக்கிறது. வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதனின் பணிச்சுமையும், அதனால் மனச்சுமையும் அதிகரித்து உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதனை எளிதில் சரிசெய்யும் உன்னத வழிதான் யோகா. இதனாலேயே இதன் முக்கியத்துவம் உணர்ந்து யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அவரவர் உடல்நிலை தன்மைக்கேற்ப யோகா பயிற்சிகளை மேற்கொண்டு நோயற்ற வாழ்வு வாழலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோன்று பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை, ராமேசுவரம் ஆகிய நீதிமன்ற வளாகங்களிலும் அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் அனைவரும் யோகா தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். உலக யோகா தினத்தையொட்டி மாவட்டத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் ஏறத்தாழ 289 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.