மதுரை
முதியவர்களின் ஆரோக்கியத்தை காக்க யோகாசனம் உதவும் -அரசு டாக்டர் தகவல்
|முதியவர்களின் ஆரோக்கியத்தை காக்க யோகாசனம் உதவும் என்று அரசு டாக்டர் தெரிவித்தார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவத்துறை சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மருத்துவ கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்ட யோகாசன நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை தலைவர் டாக்டர் நாகராணி நாச்சியார் பேசியதாவது:-
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கமிஷனர் மைதிலி ராஜேந்திரன் அறிவுறுத்தலின்பேரில் யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முதுமை காலம் என்பது, உடல் அளவிலும், மனதளவிலும் சவால் நிறைந்ததாக இருக்கிறது. இதற்கு காரணம், உடல் அளவில் தேய்மானம் அதிகரிக்கும் காலமாக முதுமை காலம் உள்ளது. இந்த காலத்தில், முதியவர்களின் துணையாகவும், அவர்களின் ஆரோக்கியம் காக்கும் வகையிலும் மருந்தாக யோகா பயிற்சி உள்ளது. பல்வேறு நோய்களுக்கு யோகா பயிற்சி சிறந்தது. யோகா முதியவர்கள் மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் ஏற்றது. சிறிய வயதில் இருந்தே யோகா செய்திருந்தால், முதுமையிலும் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். முதியவர்கள் நடைபயிற்சி செல்வதை காட்டிலும் யோகா பயிற்சி செய்வது சிறந்தது. அரசு மருத்துவமனைகளில் உள்ள யோகா மருத்துவரை அணுகி, முதியவர்களின் உடல் நலனை பொறுத்து, அதற்கு ஏற்றார்போல் எளிமையான யோகா செய்யலாம். மூச்சுப்பயிற்சி, தியான பயிற்சி, பவன முக்தாசனம், சவாசனம், விபரீதகரணி, புஜங்காசனம், சலபாசனம், பத்மாசனம், சுகாசனம் போன்ற எளிதாக பயிற்சிகளை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.