விருதுநகர்
நிலக்கடலையில் பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிப்பு
|நிலக்கடலையில் பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.
காரியாபட்டி,
நிலக்கடலையில் பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.
நிலக்கடலை சாகுபடி
விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி ஆகிய பகுதிகள் விவசாயத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளாகும். நரிக்குடி பகுதியில் அதிகமாக சீமை கருவேல் மரங்கள் அடர்ந்து முற்றிலும் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் இந்த பகுதியில் உள்ள முள் செடிகளை அப்புறப்படுத்தி விவசாயிகள் நெல் பயிரிட்டனர். தற்போது கோடை காலத்தில் நரிக்குடி அருகே இசலி, பனைக்குடி, இலுப்பைகுளம், உலக்குடி, உவர்புளியங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை பயிரிட்டு உள்ளனர்.
ரூ.40 ஆயிரம் செலவு
இதுகுறித்து உவர் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமு கூறியதாவது:-
நரிக்குடி பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளோம். நான் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். ஒரு ஏக்கர் நிலக்கடலை சாகுபடி செய்ய வேண்டுமென்றால் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு நிலக்கடலை பயிரிட்ட பின்பு வேர் பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் மகசூல் குறைவால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
மகசூல் இழப்பு
நரிக்குடி பகுதி முழுவதும் வானம் பார்த்த பூமியாகும். இந்த பகுதியில் மழை பெய்தால்தான் விவசாயம் செய்ய முடியும் நிலை இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் போர்வெல் அமைத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நரிக்குடி வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் எந்த காலத்திற்கு என்ன பயிர் விளைச்சலாகும், அந்த பயிர்களுக்கு உரிய உரம், மருந்து எப்போது இடவேண்டும் என்று அறிவுரை வழங்கினால் விவசாயிகள் அதிக மகசூல் ஈட்ட ஏதுவாக இருக்கும். அதேபோல பூச்சி தாக்கி மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.