சென்னை
யானைக்கவுனி மேம்பால பணி மந்தம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பேசின் பிரிட்ஜ் - வடசென்னை மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
|யானைக்கவுனி மேம்பால பணி மந்தமாக நடப்பதால் பேசின் பிரிட்ஜ் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வடசென்னை மக்களுக்கு தீர்வு கிடைக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை யானைக்கவுனி மேம்பாலம் 1935-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. வால்டாக்ஸ் ரோடு, புரசைவாக்கம், பெரியமேடு, சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பாலம் என்பதால் முக்கிய மேம்பாலமாக இருந்து வந்தது.
இந்தநிலையில், மேம்பாலம் பழமையாகவும், மிகவும் பழுதடைந்தும் இருந்ததால் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதில் சிரமம் இருந்தது. எனவே, 2019-ம் ஆண்டு இந்த பாலத்தை இடித்து புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. ெதற்கு ரெயில்வேயும், சென்னை மாநகராட்சியும் இணைந்து பாலம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ரூ.53 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் இருபுறமும் 364 மீட்டர் அளவுக்கு சாய்தள சாலை மாநகராட்சியால் அமைக்கப்படுகிறது. புதிய மேம்பாலம் அமைப்பதற்காக ரெயில்வே தண்டவாளங்களையொட்டி பிரமாண்ட ராட்சத தூண்கள், கான்கிரீட் உத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேம்பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டபோது 1½ ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் மேம்பாலப்பணிகள் முடியவில்லை. யானைக்கவுனி மேம்பால பணிகள் இன்னும் முடியாததால் வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் பாலத்தை சுற்றியே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
வேலை நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் கால்வாய், சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்லும் நிலையே காணப்படுகிறது.
எனவே, யானைக்கவுனி மேம்பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் முடிவடைந்ததால் தெற்கு ரெயில்வே சார்பிலான பணிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யானைக்கவுனி பாலம் வடசென்னைக்கான முக்கியத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. மின்ட் பகுதியில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை விரைவாக அடைய மிக முக்கியப் பாதையாக இருக்கிறது. எனவே, தெற்கு ரெயில்வே இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
யானைக்கவுனி மேம்பாலத்தில் தெற்கு ரெயில்வே சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பாலத்தின் இணைப்பு பகுதிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மீதம் உள்ள பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். அதன்பின்னர், பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.