சேலம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கின
|கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கின. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கின. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோட்டை மாரியம்மன்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் நடக்கிறது. கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 23 யாக குண்டம் மற்றும் 16 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சுகவனேசுவரர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது.
முதற்கால யாக சாலை பூஜை
கோவிலில் நேற்று காலை 8 மணிக்கு கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவாசனம், அக்னி சங்கரண வழிபாடு, தீபாராதனை நடந்தது. நேற்று மாலை 5 மணிக்கு விக்கிரகங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், வேள்விசாலை பிரவேசம், துவார பூஜை மண்டபார்ச்சனை, அக்னிகாரியமும், தொடர்ந்து முதற்கால யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டது.
பூஜையில் திருவாவடுதுறை ஆதினம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். பூஜையில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 10 மணிக்கு சதுர்வேதபாராயணம், தமிழ்முறை ஓதுதல், மகா தீபாராதனை நடந்தது.
இன்று 2-ம் கால யாக பூஜை
இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் 2-ம் கால யாக சாலை பூஜைகள் நடக்கின்றன. கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், சங்கல்பம், பஞ்சகவ்யம், வேள்விசாலை பிரவேசம், சூர்ய கும்ப பூஜை நடக்கிறது. காலை 11 மணிக்கு ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மேல் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து எண் வகை மருந்து (அஷ்டபந்தனம்) சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக சாலை பூஜையும், நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜையும் நடக்கிறது. காலை 7.40 மணிக்கு மேல் 8 மணிக்குள் பெரிய மாரியம்மன், ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகம்
தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பெரிய மாரியம்மன், மகாகணபதி, மதுரைவீரன் சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் கோபுரங்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது.
கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.