< Back
மாநில செய்திகள்
11 மையங்களில் சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
விழுப்புரம்
மாநில செய்திகள்

11 மையங்களில் சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு

தினத்தந்தி
|
27 Nov 2022 12:15 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 11 மையங்களில் நடைபெறும் சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை 15,670 பேர் எழுதுகின்றனர்.

விழுப்புரம்

எழுத்துத்தேர்வு

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர்வுப்பணிக்கான எழுத்துத்தேர்வு நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 11 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 3 ஆயிரத்து 141 பெண்கள் உள்பட 15,670 பேர் எழுத உள்ளனர். இத்தேர்வு பணியில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் 1,800 பேரும், அமைச்சுப்பணியாளர்கள் 140 பேரும் என 1,940 பேர் ஈடுபட உள்ளனர்.

போலீசாருக்கு அறிவுரை

இதையொட்டி தேர்வு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை விழுப்புரத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தேவராஜன், திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறுகையில், தேர்வுப்பணியில் ஈடுபடும் போலீசார் அனைவரும், தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் அனைவரையும் முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும். அதுபோல் அவர்களது ஹால் டிக்கெட்டை சரிபார்த்த பிறகு உள்ளே அனுமதிக்க வேண்டும். பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் யாரும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து வர அனுமதி இல்லை என்று அறிவுறுத்தினார். மேலும் தேர்வு நடத்தப்படும் முறைகள் பற்றிய வழிகாட்டுதல்கள் அனைத்து போலீசாருக்கும் வழங்கப்பட்டது.

இதனிடையே விழுப்புரத்தில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளனவா என்று வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்