காஞ்சிபுரம்
ராணுவ ஆள் சேர்ப்புக்கான எழுத்து தேர்வு ஆங்கிலம், இந்தியில் நடத்தப்படும் - ராணுவ ஆள் சேர்ப்பு பிரிவு இயக்குனர்
|ராணுவ ஆள் சேர்ப்புக்கான எழுத்து தேர்வு ஆங்கிலம், இந்தியில் நடத்தப்படும் என்று ராணுவ ஆள் சேர்ப்பு பிரிவு இயக்குனர் கர்னல் ஏ.கே.பாத்ரே பேட்டி அளித்தார்.
எழுத்து தேர்வு
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய அரங்கில் ராணுவ ஆள் சேர்ப்பு பிரிவின் இயக்குனர் கர்னல் ஏ.கே.பாத்ரே நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ராணுவத்துக்கான ஆள் சேர்ப்புக்குரிய எழுத்து தேர்வானது இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இந்த தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெறும்.
பொது நுழைவுத்தேர்வான ஆன்லைன் தேர்வில் தகுதி பெற்றவர்கள் 2 வது கட்டமாக உடல் தகுதி தேர்வுக்கும் பின்னர் உடல் அளவீட்டு சோதனைக்கும் உட்படுத்தப்படுவர். 3-வது கட்டமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இணைய வழி தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வின் அடிப்படையில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பட்டியல் இருக்கும். வருகிற 15-ந்தேதி வரை இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 17-ந்தேதி எழுத்து தேர்வை நடத்த பரிசீலித்து வருகிறோம்.
7 இடங்களில்
தமிழகத்தில் சென்னை, வேலூர், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் என 7 இடங்களில் இணையவழி தேர்வு நடத்தப்படும். எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கேள்விகள் வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை.
தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போனஸ் மதிப்பெண்களும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்திய ராணுவத்தில் சேருவதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு உதவ ஆன்லைன் நடைமுறைகள் மற்றும் பயிற்சி சோதனை வீடியோக்களும் தளத்தில் உள்ளன.
விண்ணப்பதாரர்களுக்கு உதவ பல்வேறு ஆன்லைன் நடைமுறைகள் மற்றும் பயிற்சி சோதனை வீடியோக்கள் தளத்தில் கிடைக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
வாய்ப்பு கிடைக்காத சூழல்
தமிழ் மொழியில் எழுத்து தேர்வு நடத்தப்படாததால் பெரும்பான்மையான தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத சூழல் உருவாகும் என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப இது குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, துணை கலெக்டர் புண்ணியகோட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.