திண்டுக்கல்
மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
|புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆடி, தை, புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்புக்குரியது. அத்துடன் இறந்தவர்களின் நாள், நட்சத்திரம் தெரியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய சிறப்பு பெற்ற மகாளய அமாவாசை நாளான நேற்று திண்டுக்கல் கோபால சமுத்திர குளக்கரையில் தர்ப்பண வழிபாடுகள் நடந்தன.
இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு குளக்கரையில் வரிசையாக அமர்ந்து வாழைஇலையில் தேங்காய், பழம், பச்சரிசி, வெல்லம், காய்கறிகளை வைத்தனர். அதன்பிறகு தர்ப்பண வழிபாடுகள் தொடங்கியது. அப்போது அவர்கள், புரோகிதர்கள் வேத மந்திரங்களை கூற அதை உடன் சொல்லி முன்னோர்களை நினைத்து எள், தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுத்தனர். அதன்பின் அங்கிருந்து சிறிதளவு பச்சரிசியை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதை சமையலில் சேர்த்து விரதம் விட்டனர். மேலும் பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தும், ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கினர்.