< Back
மாநில செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு; தாசில்தார் நடவடிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு; தாசில்தார் நடவடிக்கை

தினத்தந்தி
|
5 Oct 2023 7:25 PM IST

ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒதுக்கப்பட்ட இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி பொதுமக்கள் சிலர் விநாயகர் சிலையை வைத்து வழிபட ஆரம்பித்தனர்.

ஆவடி மாநகராட்சியில் 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. இதில் திருமுல்லைவாயல் பகுதியில் பச்சையம்மன் கோவில் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக நோயாளிகள் நிற்க கூட இடமில்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து ஆவடி மாநகராட்சி சார்பில் திருமுல்லைவாயல் எட்டியம்மன் நகரில் உள்ள எட்டியம்மன் கோவில் அருகே உள்ள சுமார் 35 சென்ட் அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு காலி இடத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட சுகாதாரத்துறை மூலம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை மூலம் சுகாதாரத்துறைக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு தேசிய நலவாழ்வு குழுமம் ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் இந்த இடம் எட்டியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் சிலர் திடீரென சுமார் 2 அடி உயரமுள்ள ஒரு பிள்ளையார் சிலையை வைத்து வழிபட ஆரம்பித்தனர்.

அதைத் தொடர்ந்து ஆவடி தாசில்தார் உதயகுமார் தலைமையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சுகாதாரத் துறைக்கு வருவாய் துறை மூலம் முறையாக ஒப்படைக்கப்பட்டதற்கான ஆவணங்கள் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் விநாயகர் சிலையை அகற்றி விடுவதாக கூறி உறுதியளித்து விட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்