< Back
மாநில செய்திகள்
சனியின் பிடியில் இருந்து விடுபட அனுமனை வழிபடுங்கள்-சிவல்புரி சிங்காரம் பேச்சு
சிவகங்கை
மாநில செய்திகள்

சனியின் பிடியில் இருந்து விடுபட அனுமனை வழிபடுங்கள்-சிவல்புரி சிங்காரம் பேச்சு

தினத்தந்தி
|
25 Dec 2022 12:47 AM IST

சனியின் பிடியில் இருந்து விடுபட அனுமனை வழிபடுங்கள் என்று சிவல்புரி சிங்காரம் பேசினார்.

சிவகங்கை,

சனியின் பிடியில் இருந்து விடுபட அனுமனை வழிபடுங்கள் என்று சிவல்புரி சிங்காரம் பேசினார்.

அனுமன் ஜெயந்தி விழா

காரைக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடி சிவ ஆஞ்சநேயர் கோவிலில் 18-வது ஆண்டாக அனுமன் ஜெயந்தி விழாவும், சுதர்சன ஹோமமும், செட்டிநாடு கிரிவலக்குழு தலைவர் சிவல்புரிசிங்காரம் தலைமையில் நடைபெற்றது.

சிவ ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கியும், வெற்றிலை மாலையும், வடை மாலையும் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். முன்னதாக திருக்கோஷ்டியூர் மாதவன் சுதர்சன ஹோமம் செய்து வைத்து கலச தீர்த்தம் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மஞ்சள், அபிஷேகப்பொடி,பால், தயிர், பழம், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.

விழாவில் கிரிவலக்குழு அமைப்பாளர் அலமு ஸ்ரீனிவாசன், காரைக்குடி ஏகப்பன், அண்ணாமலை, இளஞ்செழியன் மற்றும் அப்புராஜ் இன்னிசைக் குழுவினர் பக்திப் பாடல்களைப் பாடி பக்தர்களை பரவசமடைய செய்தனர். புதுக்கோட்டை ஆறுமுகம், சுப்ரமணியன், பார்வதி, காரைக்குடி சொக்கலிங்கம், தமிழரசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சனியின் பிடியில் இருந்து தப்பிக்கலாம்

விழாவில் சிவல்புரிசிங்காரம் பேசியதாவது:-

அனுமன் மூல நட்சத்திரம், அமாவாசை திதியில் பிறந்தவர் எனவே அன்று பிறந்தவர்கள் எல்லாம் அனுமன் கவசம் பாடி சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்லலாம். அதுமட்டுமல்ல ஏழரைச் சனி,அஷ்டமத்துச் சனி,அா்த்தாஷ்டச் சனி, கண்டகச் சனி போன்றவற்றின் ஆதிக்கத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு தடைகளும், தாமதங்களும் ஏற்படும். வாங்கல் கொடுக்கல்களில் சிக்கல்கள் ஏற்படும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். அப்படிப்பட்டவர்கள் அனுமனை வழிபட்டால் தடைகள் தானாக விலகும். எதிரிகள் பலம் குறையும்.எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

துளசி மாலை அணிவித்தால் துயரங்கள் துள்ளி ஓடும். வடைமாலை சூட்டினால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். இப்போது மிதுனம்,கடகம், துலாம், தனுசு,மகரம். கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சனி ஆதிக்கத்தில் இருப்பவர்கள். அவர்கள் அவசியம் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்.அதுமட்டுமல்லாமல் மற்ற ராசிக்காரர்களும் அனுமன் வழிபாட்டை மேற்கொண்டால் சீரும், சிறப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் புதுக்கோட்டை பார்த்தீபன் புவனேஸ்வரி, காரைக்குடி நீர்நிலை வாரிய பாலசுப்ரமணியன், மாணிக்கம், செல்வகுமார், தேவகோட்டை வக்கீல் சுரேஷ் தீபா, தனலெட்சுமி, ராஜேஷ், இந்திராகணேசன், போஸ், கிள்ளிவளவன், கோட்டநத்தம்பட்டி முத்துலட்சுமி, ஆலத்துப்பட்டி ஹர்மிளா பாலமுருகன், செந்தில் பாண்டி, ஆத்தங்குடி நாச்சியப்பன்,மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முத்துராமன் செல்வி செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்