< Back
மாநில செய்திகள்
மின்மினி - உலகின் முதல் தமிழ் ஹைப்பர்லோக்கல் சமூக ஊடக செயலி அறிமுகம்
மாநில செய்திகள்

மின்மினி - உலகின் முதல் தமிழ் ஹைப்பர்லோக்கல் சமூக ஊடக செயலி அறிமுகம்

தினத்தந்தி
|
22 Jan 2024 4:50 PM IST

’மின்மினி’பயனர்கள் ஒருவருக்கொருவர் அரட்டையடிக்கலாம் (சாட் செய்யலாம்), தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம். மேலும் மற்ற செயலி பயனர்களுடனும் தடையின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.

சென்னை,

உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தமிழர்கள் தங்களின் தோழமை மற்றும் ஒற்றுமை உணர்வை உணரக்கூடிய ஒரே தளமாக, 'மின்மினி' என்ற செயலி உருவாக்கப்பட்டு இன்று (ஜனவரி 22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் ஒருவருக்கொருவர் அரட்டையடிக்கலாம் (சாட் செய்யலாம்), தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம். மேலும் மற்ற செயலி பயனர்களுடனும் தடையின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.


மின்மினி குழுவால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மல்டி-சேனல் நெட்வொர்க்குகளை கொண்ட மின்மினி செயலியானது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும், சிட்டிசன் ஜர்னலிஸ்ட்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும். சமூக ஊடகங்களை இதுவரை பயன்படுத்தாதவர்கள் கூட இந்த மின்மினி செயலியை மிகவும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய எளிய அம்சங்களுடன், டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை

மின்மினியில், "அங்கீகாரம்" (Verified) என்ற நிலை பணம் கொடுத்து பெறப்படுவதில்லை. மாறாக கன்டென்ட்டின் தரம் மற்றும் மக்களின் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் அங்கீகாரமானது நிறுவனத்தால் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள், எனவே பயனர்கள் நம்பகமான கன்டென்ட்டுகளை படிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதை உணரலாம்.

காலப்போக்கில், இந்த தளத்தில் மற்ற பயனர்களுடன் தகுதியான உள்ளடக்கத்தை (கன்டென்ட்டுகளை) பகிர்ந்து, அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் தனிப்பட்ட பயனர்கள் "அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்கள்" என மேம்படுத்தப்படுவார்கள்".

இன்று நடைபெற்ற மின்மினியின் அறிமுக விழாவில் அதன் நிர்வாக துணைத்தலைவர் எஸ்.ஸ்ரீராம், தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "உலகளாவிய தமிழ்ச் சகோதரத்துவத்தை மட்டுமே மையமாக வைத்து மின்மினியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் பயனர்கள் செயலியின் தனித்துவமான பயன்பாட்டு அனுபவம் மற்றும் படைப்பாளர்களுக்கான பிற வருவாய் வாய்ப்புகளின் மூலம் நாங்கள் வழங்கும் பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களை பயனர்கள் பெறுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்".

"ஹைப்பர்லோக்கல் கன்டென்ட் மற்றும் எங்கள் செயலியின் மூலம் நாங்கள் உருவாக்கும் இணைப்பைக் கருத்தில் கொண்டு மின்மினி மூலம் விளம்பரதாரர்கள் இந்தியாவின் கடைசி கிராமங்கள் வரை சென்றடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று அவர் மேலும் கூறினார்..


தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய கடைகள், எங்கள் ஏஜெண்டுகள் மற்றும் ஊழியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு, 'மின்மினி கடைகள்', என்ற அங்கீகாரம் அக்கடைகளுக்கு வழங்கப்படும். அக்கடைகள், டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது. அந்த கடைக்கு வழங்கப்பட்ட பிரத்யேக கியூ ஆர் கோடுகள் (QR Code) மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களை மின்மினி பயனர்களாக மாற்றும் பொழுது கடை உரிமையாளர்கள் வருமானம் பெறுவர். மின்மினி கடைகள் மூலம் பயனர்களும் எளிதாக விளம்பரங்களை புக் செய்யலாம் (தாங்கள் செய்யும் தொழில் வாடிக்கையாளர்களை சென்றடைய, விளம்பரம் பெற விரும்பும் சேவை, பிறந்தநாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, இரங்கல் செய்தி என பல்வேறு விளம்பரங்களை புக் செய்யலாம்) ஹைப்பர் லோக்கல் விளம்பரங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கே எளிதாக சென்றடையலாம்.

இந்த செயலியானது தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கார்பெண்டர்கள் போன்ற ஆயிரக்கணக்கான சேவை வழங்குபவர்களைக் காலப்போக்கில் கொண்டிருக்கும். எனவே பயனர்கள் அத்தகைய பணியாளர்களை உடனடியாக தேடலாம். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான அதன் தனித்துவமான விளம்பரத் தொகுப்புகளுடன், மின்மினி பயனர்களை சென்றடையும் வழியையும் வழங்கும்.

"தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான கடைக்காரர்கள், சேவை வழங்குபவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அவர்களில் பலரை, மின்மினி செயலி மூலம் லிஸ்ட் செய்து அவர்களையும் டிஜிட்டல் பிசினஸிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்", என்றார்.

"விளம்பரதாரர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு, எங்களின் தனித்துவமான பின்-கோடு மூலம், தமிழ்நாட்டின் கடைசி தாலுகா வரை கடைசி மைல் தூரத்தை சென்றடையும் வழியை மின்மினி வழங்கும்", என்று ஸ்ரீராம் கூறினார். மின்மினி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

மேலும் செய்திகள்