உலகத்திறன் விளையாட்டுப் போட்டி- வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார்
|தமிழ்நாட்டின் 24 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார்.
சென்னை,
தாய்லாந்தில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாட்டின் 24 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையின் தலைநகராக்கும் நோக்கோடு கழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தாய்லாந்தில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாட்டின் 24 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.38.40 லட்சத்துக்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து இன்று வழங்கினோம்.
மேலும், ஆஸ்திரேலியா- மெல்போர்னில் நடைபெற்ற ஆசிய ஓசியானியா சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் கலந்து கொண்ட செரிப்ரல்பால்சி வீரர்களான பாண்டியராஜன் & ஜோஷ்வா ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு தலா ரூ.1.89 லட்சத்துக்கான காசோலையையும் - சீனாவில் நடைபெற்ற 19-வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற தம்பி ஆ.குஹன்வசந்த் மற்றும் லக்னோவில் நடைபெற்ற 5-வது தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 8 வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளையும் இன்று வழங்கினோம். நம் விளையாட்டு வீரர் – வீராங்கனையர் சாதிப்பதற்கு எந்த தடையும் இல்லாமல், வெற்றிகளை குவிக்க கழக அரசு என்றும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
.