உலக தற்கொலை தடுப்பு தினம்; நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் - கமல்ஹாசன்
|நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலக தற்கொலை தடுப்பு நாளில் கேட்டுக்கொள்வதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
உலகம் முழுவதும் தற்கொலை சம்பவங்கள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தனிப்பட்ட காரணங்கள், குடும்ப காரணங்கள் என பல்வேறு காரணங்களுக்காக பலர் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர்.
எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. தற்கொலையால் எந்த பிரச்சினையும் தீரப்போவதில்லை. தற்கொலையை தடுக்கும் வகையில் உலக நாடுகள் உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
மனநல ஆலோசனை, கலந்தாய்வு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு வழிகளில் தற்கொலை எண்ணங்களை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2003ம் ஆண்டு முதல் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அதன்படி, ஆண்டு தோறும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 10ம் தேதியான இன்று உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை' எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன்.
தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள். 'செயலே விடுதலை' என்பதை உணர்ந்து உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள்.
'உயிரின் இயல்பு ஆனந்தம்' என்கிறார் தேவதேவன். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலக தற்கொலை தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.