< Back
மாநில செய்திகள்
சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் உலக பக்கவாத நோய்-சொரியாசிஸ் தினம் அனுசரிப்பு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் உலக பக்கவாத நோய்-சொரியாசிஸ் தினம் அனுசரிப்பு

தினத்தந்தி
|
30 Oct 2022 7:10 PM IST

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் உலக பக்கவாத நோய் தினம் மற்றும் சொரியாசிஸ் தினம் அனுசரிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

விழிப்புணர்வு பேரணி

உலக பக்கவாத நோய் தினம் மற்றும் சொரியாசிஸ் தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணிக்கு ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் மணி தலைமை தாங்கினார்.

பேரணியில் துறை சார்ந்த டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டு, பக்கவாத நோய் மற்றும் சொரியாசிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சொரியாசிஸ் நோயாளிகளுக்கு இலவச மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

அதிக உப்பு வேண்டாமே

இந்த நிகழ்ச்சியில், ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் மணி பேசியதாவது:-

பக்கவாதம் ஏற்பட்ட 4½ மணி நேரத்துக்குள் உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், அது ஊனத்துக்கு வழிவகுக்கும். அது அவர்களது வாழ்க்கையையே பாதித்துவிடும். பக்கவாதத்துக்கு முக்கிய காரணமே ரத்த கொதிப்பு தான். அதற்கு அதிக உப்புள்ள உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 'சிப்ஸ்', ஊறுகாய் போன்றவற்றை அளவோடு சாப்பிட வேண்டும். அதேபோல் கொழுப்பு சத்து அதிகம் உள்ள 'பாஸ்ட் புட்' உணவுகளை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

பரம்பரை தோல்நோய்

சொரியாசிஸ் நோய் என்பது தொற்று வியாதி அல்ல. இது மன அழுத்தத்தினால் உண்டாக கூடியது. சொரியாசிசை பொறுத்தவரை 30 சதவீதம் பரம்பரை வழியாக வரக்கூடியது தான். சொரியாசிஸ் நோயால் 15 வயதில் இருந்து 25 வயதிற்கு உட்பட்டவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் புறஊதா கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இதற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேரணியில் தோல் மருத்துவத்துறை டாக்டர் சுசித்திரா, நரம்பியல் துறை டாக்டர் சண்முக சுந்தரம் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டீன் டாக்டர் சாந்திமலர் தலைமையிலும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டீன் டாக்டர் பாலாஜி தலைமையிலும் பக்கவாத நோய் மற்றும் சொரியாசிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

மேலும் செய்திகள்