உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகள் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு
|உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் 2024 -ம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (22.12.2023) கள ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை வர்த்தக மையத்தில் இம்மாநாடு நடைபெற உள்ள புதிய கட்டிட பணிகளை கள ஆய்வு மேற்கொண்ட தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா கட்டுமானப் பணிகளின் தரத்தினை உறுதி செய்வதுடன், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான அறிவுரைகளையும் வழங்கினார். சென்னை வர்த்தக மையப் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் குறித்த நேரத்தில் விரைந்து முடிக்கும்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், சுற்றுப்புறங்களில் உள்ள கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அக்கட்டிடம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக பராமரிக்கும்படி பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர். ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அரசு முதன்மைச்செயலாளர்/சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் மு.ஆ. சித்திக், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.