< Back
மாநில செய்திகள்
மனித உரிமை மீறல் நடைபெறாமல் முற்றிலும் தடுக்க வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மாநில செய்திகள்

மனித உரிமை மீறல் நடைபெறாமல் முற்றிலும் தடுக்க வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தினத்தந்தி
|
9 Dec 2023 11:30 PM GMT

தி.மு.க. அரசு, தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

மனித உரிமை மீறல் நடைபெறாமல் முற்றிலும் தடுக்க வேண்டும் என்று உலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உலக மனித உரிமைகள் நாள் செய்தி வருமாறு:-

மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ந் தேதி, உலக மனித உரிமை நாள் உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 75-வது ஆண்டு ஆகும். அவ்வகையில், அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி என்பதை இந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது.

1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்று வெளியிட்டது; அப்பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதில் முக்கிய பங்காற்றிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனைத்தொடர்ந்து இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 28.9.1993 அன்று நிறைவேற்றப்பட்டது.

அச்சட்டப்படி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில்தான் தி.மு.க. அரசு மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன் 17.4.1997 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியது. இந்த ஆணையம், இந்திய அரசியல் சட்டமும், நீதிமன்றங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் அளித்திடும் வாழும் உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, சுதந்திரம் போன்றவைகளை நிலைநாட்டுவதற்காக பாடுபடுகிறது.

ஆணையம் தொடங்கப்பட்ட 17.4.1997 முதல் கடந்த செப்டம்பர் வரை இந்த ஆணையத்திற்கு வரப்பெற்ற 2 லட்சத்து 60 ஆயிரத்து 55 முறையீடுகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 918 முறையீடுகள் மீது தீர்வு கண்டு, ஆணை பிறப்பித்து நலிந்தவர்களின் நலன் காக்கும் திருப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.

மாமல்லபுரம் பூஞ்சேரியைச் சேர்ந்த ஒரு நரிக்குறவர் சமுதாயப் பெண்ணும், அவரது குழந்தையும் அப்பகுதியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்க விடாமல் தடுத்துத் திருப்பி அனுப்பிய செய்திகேட்டு, அறநிலையத்துறை அமைச்சர் மூலம் அவர்களை விருந்தில் பங்கு பெறச் செய்தது இந்த அரசு. அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவருக்கு ஆறுதலையும் இந்த அரசு கூறியது. அப்பகுதி வாழ் நரிக்குறவர் மற்றும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 282 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உள்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களைப் பெருமைப்படுத்தியதும் இந்த அரசுதான்.

இந்த உணர்வோடு, மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம். அதற்கு உறுதுணையாக ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் செயல்படுவோம். மண்ணில் மனிதம் காப்போம் என்று அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்