< Back
மாநில செய்திகள்
உலகக்கோப்பை கிரிக்கெட்: மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு - டிக்கெட் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்
சென்னை
மாநில செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட்: மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு - டிக்கெட் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்

தினத்தந்தி
|
8 Oct 2023 1:15 PM IST

சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரத்தை நீட்டித்து, மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. போட்டியை காண 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருகை தர உள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் இருக்க கூடும் என்பதால், ரசிகர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்வது குறித்து, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு, வீடுகளுக்கு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ ரெயில் சேவை, இரவு 11 மணியில் இருந்து கூடுதலாக ஒரு மணிநேரம் நீட்டிக்கப்பட்டு இரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது.

நீல வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமானம் நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை வரை ரெயில் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில், டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் இருந்து பரங்கிமலை ரெயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் ரெயில் இயக்கப்படும்.

ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து எந்த வித கட்டணமும் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரசிகர்கள் இதற்கு ஏற்ப தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்