சென்னையில் நாளை உலகக்கோப்பை கிரிக்கெட்: மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு
|சென்னையில் நாளை உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுவதை ஒட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (23-ந் தேதி) நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பயண போக்குவரத்து செலவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்றுள்ளது. அதன்படி, போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நாளை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டினை பயன்படுத்தி எந்தவித கட்டணமும் இன்றி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையம் நோக்கி ரெயில்கள் இயக்கப்படும். இதேபோல, சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து பரங்கிமலைக்கு 15 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.