< Back
மாநில செய்திகள்
உலக காலநிலை மாற்ற தினம் கடைபிடிப்பு கல்லூரி மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி பசுமை தாயகம் அமைப்பு விழிப்புணர்வு - சவுமியா அன்புமணி பங்கேற்பு
சென்னை
மாநில செய்திகள்

உலக காலநிலை மாற்ற தினம் கடைபிடிப்பு கல்லூரி மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி பசுமை தாயகம் அமைப்பு விழிப்புணர்வு - சவுமியா அன்புமணி பங்கேற்பு

தினத்தந்தி
|
16 Sept 2023 9:48 AM IST

உலக காலநிலை மாற்ற தினத்தையொட்டி கல்லூரி மாணவிகளுக்கு பசுமை தாயகம் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உலக காலநிலை மாற்ற தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கலந்துகொண்டார். அவர், மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர், சவுமியா அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக காலநிலை மாற்ற விழிப்புணர்வு பிரசார நிறைவு விழா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 17-ந்தேதி (நாளை) நடக்கிறது. அங்கு லட்சக்கணக்கானோர் கூடி நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் உபயோகிப்பதை உலக நாடுகள் கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க இருக்கிறார்கள்.

புதைபடிவ எரிபொருள் பயன்பாடு அதிகமாகி வருவதால் பசுங்குடில் வாயுக்களின் வளிமண்டல அடர்த்தி அதிகரிக்கிறது. இதனால் உலகம் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகம் சூடாகி விட்டது. இன்னும் 1.5 செல்சியஸ் சூடாகி விட்டால், உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்றவே முடியாது என்று வல்லுனர்கள் கருத்து கூறுகிறார்கள்.

அவர்களுடைய கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. புதைபடிவ எரிபொருளை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.

காலநிலை நீதி வேண்டும் என்பது குறித்தும் தனியாக பிரசாரங்கள் செய்து வருகிறோம். தற்போது புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளது. காற்றாலை மின்சாரம், சோலார் போன்றவைகள் வந்துள்ளது. சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இன்னும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனைக்கு வந்தால் கண்டிப்பாக புதைபடிவ எரிபொருள் இல்லாமல் வாழ்க்கையை நடத்தலாம்.

மாற்று எரிபொருட்களுக்கு மானியம், சலுகைகளை வழங்கி அரசாங்கம் ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்