உலக பேட்மிண்டன் போட்டி: பதக்கம் வென்ற சாத்விக் - சிராக் ஜோடிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
|உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாத்விக் - சிராக் ஜோடிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை,
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா-சோ யூ யிக் இணையை சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஜோடி 22-20, 18-21,16-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்தப்பதக்கத்தின் மூலம் உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.
இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாத்விக் - சிராக் ஜோடிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்காக முதல் பதக்கம் (வெண்கலம்) வென்ற சாத்விக் - சிராக் இணைக்கு வாழ்த்துக்கள். அவர்கள் இனிவரும் உலக தொடர்களில் அதிக பதக்கங்கள் வென்று வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.