புதுக்கோட்டை
படைப்புழுவை கண்காணித்தல் குறித்த செயல் விளக்க கருத்தரங்கம்
|படைப்புழுவை கண்காணித்தல் குறித்த செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கே.பி., இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பயிர் நலன் மற்றும் பாதுகாப்பு, நோமேடிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய மக்காச்சோளத்தில் சென்சார் தொழில்நுட்ப உதவியுடன் படைப்புழுவை கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் தொடர்பான செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ராஜ்குமார் தலைமை தாங்கினார். இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி டெரெக் ஸ்கபெல் கலந்து கொண்டு சென்சார் தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் இனக்கவர்சிப் பொரி ஆராய்ச்சி பற்றி விளக்கி பேசினார். மேலும், மக்காச்சோளத்தில் சேதத்தை ஏற்படுத்தும் படைப்புழு அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட அதிக சேதத்தை உண்டாக்கக்கூடிய ஒரு அழிவுரமான பூச்சியாகும். இப்புழுவை கட்டுப்படுத்த அதிகப்படியான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நன்மைதரும் பூச்சிகளின் எண்ணிக்கை குறையும். தற்பொழுது புனல் இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தப்படுகின்றது. இப்பொறியில் பூச்சிகளின் எண்ணிக்கையை தினசரி நேரில் சென்று பார்த்து தரவுகளை சேகரித்தாக வேண்டும். அதற்கு மாற்றாக மின்னணு உணர்திறன் கொண்ட இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்த சோதனை ஆராய்ச்சி திட்டம் புதுக்கோட்டையில் வம்பன், திருவரங்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் நிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பூச்சிகளின் எண்ணிக்கை தரவுகளை கணினி, மடிக்கணினி, செல்போன் மூலம் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். இந்த புதிய இனக்கவர்ச்சி பொறியானது, தற்போது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சி முடிவில் ஒரு சிறந்த மின்னணு உணர்திறன் கொண்ட இனக்கவர்ச்சி பொறி உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இங்கிலாந்து நாட்டு பயிர் நலன், பாதுகாப்பு வளர்ச்சி அலுவலர் ஜென்னா ரோஸ், எலிசபெத் ஹன்னா, ஜேம்ஸ் காட்பர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், வம்பன் தேசிய பயறுகள் வகை ஆராய்ச்சி நிறுவன பூச்சியியல் விஞ்ஞானி ராஜா ரமேஷ் ஆகியோர் பேசினர். முன்னதாக விஞ்ஞானிகள் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவை சந்தித்து பேசினர். இதில் வேளாண்மைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.