< Back
மாநில செய்திகள்
சிறுபான்மையினர் மகளிர் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

சிறுபான்மையினர் மகளிர் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

தினத்தந்தி
|
18 Oct 2023 12:20 AM IST

ராணிப்பேட்டையில் சிறுபான்மையினர் மகளிர் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் சிறுபான்மையினர் மகளிர் உதவும் சங்கங்களின் செயல்பாடுகள் மற்றும் சிறுபான்மையினர் இன மக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்தும், நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் நிதிக்கு இரண்டு மடங்கு நிதியினை அரசு இச்சங்கத்திற்கு வழங்கி எளிய நிலையில் உள்ள மகளிருக்கு சுய தொழில் செய்ய ஏதுவாக கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சங்கமும் இதே போன்று செயல்பட வேண்டும். சிறுபான்மையினர் மகளிர் உதவும் சங்கங்களுக்கு அரசின் இணை மானியத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே குழு உறுப்பினர்கள் எளிய நிலையில் உள்ள குடும்பங்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும்.

மேலும் இச்சங்கம் அதிக நிதியை பெற்றும், அதனுடன் அரசின் இணை மானிய உதவி தொகையை சேர்த்து எளிய நிலையிலுள்ள பல மகளிர்களுக்கு உதவி செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடன் உதவிகள்

மேலும், டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடனுதவி திட்டங்களின் மூலம் மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக சிறுபான்மையின மக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுவது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்