விழுப்புரம்
சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்; கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது
|விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி, விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துத்துறை, காவல்துறையினர் ஆகியோரின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் என்னென்ன மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், சாலை விபத்துகளை குறைப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் பழனி கூறியதாவது:-
அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்துகள் தொடர்ந்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கையை குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாதந்தோறும் அறிக்கையாக அளிக்க வேண்டும். சாலைகளின் இரு ஓரங்களிலும் உள்ள திறந்தவெளி கிணறுகளை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சாலை பாதுகாப்புக்குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ள தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.