கடலூர்
தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் குடோன் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
|தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் குடோன் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் சிப்காட்டில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இ்ங்கிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுகிறது. இதற்காக இங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த தொழிலாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று கூறி, நேற்று டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.
சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன், சுமை தூங்குவோர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்புராயன், துணைத் தலைவர் ஆளவந்தார், மாவட்ட துணை செயலாளர் பாபு, துணை செயலாளர் திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டமானது, மதுபான உற்பத்தி ஆலை நிர்வாகம் இறக்கு கூலி உயர்வை உடனே வழங்க வேண்டும், டாஸ்மாக் நிர்வாகம் தலையிட்டு கோரிக்கை பெற்றுத் தர வேண்டும், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், மதுபானங்கள் ஏற்று கூலியை தமிழக முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.