தேனி
ஆண்டிப்பட்டி அருகே கஞ்சித்தொட்டி திறந்து சலவை தொழிலாளர்கள் போராட்டம்
|ஆண்டிப்பட்டி அருகே கஞ்சித்தொட்டி திறந்து சலவை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நெசவு தொழிலுக்கு அடுத்தப்படியாக, இங்கு சலவை தொழிலிலும் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். சக்கம்பட்டியில் உற்பத்தி செய்யப்படும் வேட்டிகள் மற்றும் ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வேட்டிகளை சலவை செய்து, அதனை அயனிங், பேக்கிங் செய்து சலவை தொழிலாளர்கள் சந்தைப்படுத்தி வருகின்றனர்.
இதற்காக சக்கம்பட்டி பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட சலவை பட்டறைகள் உள்ளன. சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசு ஏற்படுகிறது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, சக்கம்பட்டியில் சலவை பட்டறைகள் செயல்பட தடை விதித்தது. அதைத்தொடர்ந்து சலவை பட்டறைகளில் உள்ள மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக சலவை தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே சலவை பட்டறையில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் மாசு ஏற்படுவதில்லை. வீட்டில் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் சாதாரண வேதிப்பொருளையே பயன்படுத்தி வருகிறோம். எனவே சலவை பட்டறைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று சலவை பட்டறை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் சலவை பட்டறைகளை மீண்டும் செயல்பட அனுமதிக்கக்கோரி, சக்கம்பட்டியில் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் இன்று நடந்தது. இதில் ஏராளமான சலவை தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. சலவை பட்டறைகளை மீண்டும் செயல்பட அரசு அனுமதிக்கும் வரை கஞ்சித்தொட்டி போராட்டத்தை தொடர போவதாக சலவை தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.