தர்மபுரி
ஊரக வேலை உறுதி திட்டத்தில்தொடர்ந்து பணி வழங்ககோரி பெண்கள் தர்ணா
|மொரப்பூர்:
மொரப்பூர் அருகே சாமண்டஅள்ளி ஊராட்சி பொன்னா கவுண்டம்பட்டியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்த பணியை தொடர்ந்து வழங்ககோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற மொரப்பூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி செங்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரவிச்சந்திரன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தர்ணாவில் ஈடுபட்டவர்கள் பொன்னா கவுண்டம்பட்டியில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பணிகள் நடைபெற்று வந்தது என்றும், அந்த பணியை தற்போது ஊராட்சி நிர்வாகம் நிறுத்திவிட்டதாகவும், அந்த பணியை தொடர்ந்து வழங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த ஒன்றியக்குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி செய்ய அனுமதி அளித்தனர். இதை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.