நாமக்கல்
மின்கட்டண உயர்வு, மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிரமம் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி வீசுமா? அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை
|மின்கட்டணம் உயர்வு, மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நலிவடைந்துள்ள மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி வீச அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எருமப்பட்டி:
மின்கட்டணம் உயர்வு, மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நலிவடைந்துள்ள மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி வீச அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்பாண்ட தொழிலாளர்கள்
பண்டைய காலத்தில் மண்பானை இல்லாத வீடுகளே இல்லை என்கிற அளவுக்கு அதன் தேவை அதிகமாக இருந்தது. சமையல் செய்வது, தண்ணீர் பிடித்து வைப்பது, பொருட்களை போட்டு வைப்பது என பல்வேறு வகையில் மண்பானைகளை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் காலபோக்கில் இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக் பொருட்களின் வருகையால் மண்பானைகளின் தேவை குறைந்து கொண்டே வருகிறது. தற்போது கிராமங்களில் ஒரு சில வீடுகளில் மட்டுமே மண்பானைகளை பயன்படுத்தி வருகின்றனர். நகர மக்களில் ஒருசிலர் மண்பானையில் குடிக்க தண்ணீர் பிடித்து வைத்துள்ளனர். இதுதவிர பொங்கல் வைப்பதற்கு மண்பானை பயன்படுத்தப்படுகிறது.
மண்பானையின் பயன்பாடு குறைந்து கொண்டே வருவதால் அதனை நம்பி உள்ள மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கையும் நலிவடைந்து கொண்டே செல்கிறது. எனவே அரசு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சொற்ப வருமானம்
நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் 12 குடும்பத்தினர் தொன்று தொட்டு மண்பானை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். இதற்காக தேவையான மண் காளிசெட்டிப்பட்டி அருகே உள்ள குரும்பப்பட்டி ஆற்றில் இருந்து எடுத்து வரப்படுகிறது. மேலும் கார்த்திகை தீபதிருநாளையொட்டி அகல்விளக்குகளும் அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றனர். ஒரு அகல் விளக்கு ரூ.1 வீதம் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
பானைகளை பொறுத்தவரையில் சிறிய பானை மற்றும் பெரிய பானைகள் ரூ.100 முதல் ரூ.150 வரை விலை போகிறது. இதேபோல் சாம்பார் செய்யும் சட்டிகள் ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து கொண்டு, தற்போது நிலவும் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் மண்பாண்ட தொழிலாளர்கள் திணறி வருகின்றனர். இதற்கிடையே மழைக்காலங்களில் மண்பாண்ட தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருவதை கருத்தில் கொண்டு, அரசு 6 மாதங்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கி வருகிறது. அதுவும் இப்பகுதி தொழிலாளர்களுக்கு கிடைப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
இதுகுறித்து பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி பொன்னுசாமி (வயது 55) கூறியதாவது:- பொதுவாக மழைக்காலங்களில் மண்பாண்டம் செய்யும் தொழிலை செய்ய முடியாது. எனவே இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் எங்களுக்கு கிடைப்பது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவித்தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் பானை செய்வதற்கு தேவையான மண் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே எளிதில் மண் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பானை செய்வதற்கான எந்திரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி வீசும். இவ்வாறு அவர் கூறினார்.
மின்கட்டண சலுகை
மண்பாண்ட தொழிலாளர் முட்டாஞ்செட்டி சுரேஷ் காந்த் கூறியதாவது:- மண்பானைகள் செய்ய மின் மோட்டார்களை இயக்க வேண்டி உள்ளது. இதற்கு மின்கட்டணமாக கணிசமான தொகையை செலுத்த வேண்டி உள்ளது. எனவே நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை காப்பாற்ற மின்சாரம் சலுகை விலையில் அல்லது இலவசமாக வழங்க வேண்டும். இதேபோல் தொழில் செய்ய வட்டியில்லா கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் எங்கள் வீடுகள் ஊரின் நடுவே உள்ளது. அதனால் பானையை வேக வைப்பது வீட்டின் முன்பே நடைபெறும். இதனால் புகைமூட்டம் எழும்பி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் பகையையும் சம்பாதிக்க வேண்டி உள்ளது. எனவே எங்களுக்கு ஊரின் ஒதுக்குப்புறமாக புறம்போக்கு இடத்தில் பானை வேக வைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.