நாமக்கல்
நாய் குறுக்கே வந்ததால்மொபட்டில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
|மோகனூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மொபட்டில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
மோகனூர்
தச்சு தொழிலாளி
மோகனூர் அருகே உள்ள பேட்டப்பாளையம் ஊராட்சி மணியங்காளிபட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி இரவு மோகனூரில் இருந்து ராஜா தனது மகள் நந்தினியுடன் (23) மொபட்டில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வாங்கல் பிரிவு ரோடு அருகே வந்தபோது, நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்தது.
இதில் மொபட்டில் இருந்து இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாவை, நாமக்கல் தனியார் மருத்துவமனையிலும், அவரது மகள் நந்தினியை தனியார் மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதில் ராஜாவின் மகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்தநிலையில் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜாவை மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் ரகு (21) மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனார்.