திண்டுக்கல்
கொடைரோடு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்து உயிரைவிட்ட தொழிலாளி
|கொடைரோடு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
கொடைரோடு அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் ஜான்கென்னடி (வயது 49). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கொடைரோடு ரெயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு 1-வது நடைமேடையில் அவர் அமர்ந்திருந்தார். அப்போது சென்னையில் இருந்து மதுரை நோக்கி பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் கொடைரோடு ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.
சிறிது நேரத்தில் அந்த ரெயில் புறப்பட தயாரானது. அப்போது நடைமேடையில் அமர்ந்திருந்த ஜான்கென்னடி திடீரென்று, அந்த ரெயிலுக்கு முன்னால் தண்டவாளத்தில் படுத்தார்.இதற்கிடையே மதுரை நோக்கி புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், தண்டவாளத்தில் படுத்திருந்த ஜான்கென்னடி மீது ஏறி இறங்கியது. இதில் அவரது உடல் 2 துண்டாகி, சம்பவ இடத்திலேயே ஜான்கென்னடி பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். பின்னர் ஜான்கென்னடியின் உடலை போலீசார் கைப்பற்றி நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜான்கென்னடி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன ஜான்கென்னடிக்கு ஆரோக்கியமேரி என்ற மனைவியும், ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.