< Back
மாநில செய்திகள்
வாகனம் மோதி தொழிலாளி சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வாகனம் மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
1 Jun 2022 1:01 AM IST

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

அதிகாலையில் புறப்பட்டார்

ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிங்கராஜ் (வயது 67), தொழிலாளி. சாலையோரம் கிடக்கும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்த வந்தார்.

மேலும், தினமும் அதிகாலையில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் உள்ள ஒரு கடையில் சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணிக்கு வழக்கம் போல் கடைக்கு வேலைக்கு புறப்பட்டார்.

சாலையோரம் பிணம்

இந்தநிலையில், காலை 6 மணியளவில் சுபாஷ்நகர் விலக்கு பகுதியில் சிங்கராஜ் சாலையோரம் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன.

அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து சிங்கராஜின் மனைவியிடம் தகவல் தெரிவித்தனர். மனைவியும் உறவினர்களும் விரைந்து வந்து பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனா, சப்- இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மற்றும் போலீசார் அங்கு வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிங்கராஜ் சாவுக்கான காரணம் தெரியவில்லை.

வாகனம் மோதியது

இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் வாகனம் மோதி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டு பிடிக்க அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இறந்த சிங்கராஜுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்